வெறுங்கைகளால் முழம் போடும் முதல்வர்: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் எங்கே? அன்புமணி கேள்வி
வெறுங்கைகளால் முழம் போடும் முதல்வர்: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் எங்கே? அன்புமணி கேள்வி
ADDED : மார் 08, 2026 05:41 PM

சென்னை: 'வெறுங்கைகளால் முழம் போடும், முதல்வரின் அறிவிப்புகளை எல்லாம், நகைச்சுவையாகத்தான் தமிழக மக்கள் பார்க்கின்றனர்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 'அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பதுபோல், தி.மு.க., ஆட்சியில் ஆடம்பரமாகவும் பிரமாண்டமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், அவற்றால் மக்களுக்கு 10 பைசா கூட பயனில்லை. 'புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, தமிழக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, இரு மாதங்களாகியும், அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு ஊழியர்களை தி.மு.க., அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., அரசு கூறியபடி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், கடந்த ஜன.,1 முதல் நடைமுறைக்கு வந்திருந்தால், கடந்த இரு மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு, அத்திட்டத்தின்படி ஓய்வூதியப் பலன்களும், அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு எதுவுமே வழங்கவில்லை.
அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க., அரசுக்கு இல்லை. அரசு ஊழியர்கள் போராட்டத்தை தடுக்க, தி.மு.க., அரசால் நடத்தப்பட்ட ஏமாற்று நாடகம்தான், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட அறிவிப்பு.
தமிழக அரசு நினைத்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த முடியும். ஆனால், அதற்கு துப்பில்லாத அரசு, '2030ல் வானத்தை வில்லாய் வளைப்போம்' என அளக்கிறது. வெறுங்கைகளால் முழம் போடும், முதல்வரின் அறிவிப்புகளை எல்லாம், தமிழக மக்கள் நகைச்சுவையாகத்தான் பார்க்கின்றனர்.
தமிழக மக்களை சில நேரம் ஏமாற்ற முடியும். எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு மறக்க முடியாத பாடத்தை, தமிழக மக்கள் புகட்டுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

