கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : அக் 17, 2025 01:56 AM

சென்னை:இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ளார். இப்பயணம், பாக் விரிகுடாவின் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்னைகளை தீர்க்க, சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளது.
கடந்த 2001 முதல், 106 சம்பவங்களில், 1,482 மீனவர்கள், 198 மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இதனால், மீனவர்கள் பெரும் துயரத்தையும், பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளனர்.
இது குறித்து, இலங்கை பிரதமரிடம் விவாதிக்க வேண்டும். கச்சத்தீவு, மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல், இலங்கைக்கு மாற்றப்பட்டது.
அதை மீட்பதற்கும், பாக் விரிகுடா பகுதியில் உள்ள நம் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும். மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க, இது முக்கியமானது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னையை தீர்க்க, இருதரப்பு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான துாதரக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.