ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறை: கிராமங்களில் 1,500 சமுதாய சுகாதார வளாகங்கள்
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறை: கிராமங்களில் 1,500 சமுதாய சுகாதார வளாகங்கள்
UPDATED : மார் 27, 2025 05:58 AM
ADDED : மார் 27, 2025 12:58 AM

சென்னை:''ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், குழந்தை நேய வகுப்பறைகள் கட்டப்படும். பொது மக்களின் பயன்பாட்டுக்காக, கிராமங்களில் மக்கள் கூடும் இடங்களில், 1,500 சமுதாய சுகாதார வளாகங்கள் அமைக்கப்படும்,'' என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில்அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
ஊரகப் பகுதிகளில், 500 முழு நேர நியாய விலை கடைகள், 61 கோடி ரூபாயில் கட்டப்படும்
தமிழகத்தில் புவி வெப்பமடைதலை தடுக்கவும், ஊரகப் பகுதிகளின் பசுமையை அதிகரிக்கவும், ஒரு கோடி மரக்கன்றுகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, அரசு நிலங்கள், நிறுவனங்கள் மற்றும் சாலையோரங்களில் நடப்படும்
500 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 50 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் கட்டப்படும்
ஊரகப் பகுதிகளில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குளங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சமுதாய நிலங்களை சமன்படுத்தி மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மண் சாலைகள், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓரடுக்கு கப்பி சாலைகளாக தரம் உயர்த்தப்படும்
ஊரக குடியிருப்பு பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள், சந்துகளில் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப மேம்படுத்தும் பணிகள், 350 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், குழந்தை நேய வகுப்பறைகள், 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த நிதி ஆண்டில் ஊரகப் பகுதிகளில், 800 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும். 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,200 புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்
நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக 69 கோடி ரூபாய் வழங்கப்படும்
தமிழகத்தில் உள்ள 278 மலைக்கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக, 30 கோடி ரூபாய் வழங்கப்படும்
வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு, 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும்
துப்புரவு பணியாளர்களின் நலப் பணிகளுக்காக, துப்புரவு தொழிலாளர்கள் நல வாரியத்துக்கு, 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.
நமக்கு நாமே திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் பொது பயன்பாட்டு கட்டடங்களை பராமரிக்க, விரிவான பராமரிப்பு கொள்கை வகுக்கப்படும். 2025 - 26ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இதற்கென மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
பொது மக்களின் பயன்பாட்டுக்காக, கிராமப்புறங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், 1,500 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.