ஈரோட்டில் நா.த.க., - த.பெ.தி.க.,வினர் மோதல்: வேட்பாளர் உட்பட 51 பேர் மீது வழக்கு
ஈரோட்டில் நா.த.க., - த.பெ.தி.க.,வினர் மோதல்: வேட்பாளர் உட்பட 51 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 03, 2025 07:02 AM
ஈரோடு : ஈரோட்டில் சர்ச் முன், நா.த.க., மற்றும் த.பெ.தி.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நா.த.க., வேட்பாளர் உள்ளிட்ட, 51 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் ஓய உள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சைகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தலைமையில் அக்கட்சியினர், ஈரோடு ப.செ.பார்க் சி.எஸ்.ஐ., பிரப் சர்ச் முன் நின்று கிறிஸ்துவர்களிடம் நேற்று காலை 11:00 மணியளவில் ஓட்டு சேகரித்தனர்.
அப்போது, ஈ.வெ.ரா., குறித்து பேசிய சீமானை கண்டிக்கும் விதமாக, சர்ச் முன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், சீமான் போட்டோவை ஒருபுறம், நா.த.க., போலவும், மறுபுறம் பா.ஜ.,வின் காவி உடையை அணிந்து இருப்பது போலவும் கார்ட்டூன் போட்டோ அச்சிடப் பட்ட துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த, நா.த.க.,வினர் துண்டு பிரசுரங்களை பிடுங்கி கிழித்தெறிந்தனர். பின், த.பெ.தி.க.,வினரை, நா.த.க.,வினர் தாக்க முற்பட்டனர்.
போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் அழைத்து சென்றனர்.
பின்னர் நா.த.க.,வினர் மீண்டும் சர்ச் முன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதோடு, ஈ.வெ.ரா.,வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையில், 'தேர்தல் விதிமுறை மீறி, அரசு பணியை செய்ய விடாமல் செய்ததோடு, தான் தடுத்தும் சர்ச்சுக்குள் சென்று கட்சி சின்னத்துடன் தேர்தல் பிரசாரம் செய்ததாகவும், துண்டு பிரசுரங்களை அளித்து ஓட்டு சேகரித்தும், முறையாக அனுமதி பெறாமலும், கலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட, 51 பேர் ஓட்டு சேகரித்ததாக பறக்கும்படை அதிகாரி தினகரன், ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி, த.பெ.தி.க.,வைச் சேர்ந்த ஜபருல்லா, 45. சந்திரன், 34, ரஞ்சித் குமார், 41, ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.