பல்நோக்கு பணியாளர்களாக மாற்ற ரூ.1 லட்சம் லஞ்சம் துாய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு
பல்நோக்கு பணியாளர்களாக மாற்ற ரூ.1 லட்சம் லஞ்சம் துாய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு
ADDED : நவ 12, 2025 01:53 AM
சென்னை ஆரம்ப சுகாதார நிலையங்களில், துாய்மை பணியாளர்களை பல்நோக்கு பணியாளர்களாக நியமிப்பதற்கு, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்களாக, 2,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கும் மாதம், 1,500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தரக் கோரி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்தன.
அதன்படி, துாய்மை பணியாளர்களுக்கு, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்; இதுவரை நிறைவேற்றப் படவில்லை.
அதேநேரம், துாய்மை பணியாளர்கள், மாவட்ட சுகாதார திட்டத்தின் கீழ், பல்நோக்கு பணியாளர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதுவரை, 938 பேர் பல்நோக்கு பணியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதம், 13,000 ரூபாயில் இருந்து, 19,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது.
இந்நிலையில், மீதமுள்ள மருத்துவமனை துாய்மை பணியாளர்களையும், பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக நியமிப்பதற்கான பணி நடந்து வருகிறது. இப்பணிகளுக்கு, துாய்மை பணியாளர்களிடம், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக, துாய்மை பணியாளர்களாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம்.
எங்களை பல்நோக்கு பணியாளர்களாக மாற்ற, 1 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர். மாதம், 1,500 ரூபாய் சம்பளம் வாங்கும் எங்களால் எப்படி இவ்வளவு தொகை தர முடியும்?
இவ்வாறு அவர்கள் கூறினர்.

