தங்கும் விடுதிகள் வணிக கட்டடங்கள் அல்ல சொத்துவரி செலுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து
தங்கும் விடுதிகள் வணிக கட்டடங்கள் அல்ல சொத்துவரி செலுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து
ADDED : நவ 12, 2025 01:54 AM
சென்னை,
'ஹாஸ்டல் எனப்படும் தங்கும் விடுதிகள், வணிக கட்டடங்கள் அல்ல' என, தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவற்றுக்கு வணிக கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மாணவ - மாணவியர் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு, வணிக கட்டடங்களுக்கான சொத்து வரியை செலுத்தும்படி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
வழக்குகள் தாக்கல் இவற்றை ரத்து செய்யக் கோரி, ஹாஸ்டல் உரிமையாளர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் அபர்ணா நந்தகுமார் ஆஜராகி, ''பொருளாதாரத்தில் பின் தங்கிய, நடுத்தர பிரிவினர், இந்த விடுதிகளில் தங்கு கின்றனர்.
''இவற்றுக்கு வணிக கட்டடங்களுக்கான சொத்து வரியை விதித்தால், அதை விடுதியில் தங்குவோரிடம் வசூலிக்க வேண்டியிருக்கும். எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
ரத்து இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, ''தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லாதவர்கள் தான், இது போன்ற விடுதிகளில் தங்குகின்றனர். எனவே, அவை குடியிருப்பு கட்டடங்கள் தானே தவிர, வணிக கட்டடங் களாக கருத முடியாது.
''எனவே, வணிக கட்டடங்களுக்கான சொத்து வரியை செலுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து, ஹாஸ்டல்களுக்கு குடியிருப்பு கட்டடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

