அப்பல்லோவில் இருந்தபடி அரசு பணி கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
அப்பல்லோவில் இருந்தபடி அரசு பணி கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
ADDED : ஜூலை 24, 2025 12:39 AM
சென்னை:சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி, 'உங்களுடன் ஸ்டாலின் ' திட்ட செயலாக்கம் குறித்து, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி, முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்தபடி, அரசு பணிகளை கவனித்து வருகிறார்.
உத்தரவு கடந்த 15ம் தேதி துவங்கப்பட்ட, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட செயல்பாடு குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோவை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோருடன், முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
'இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும்' என, கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
இதுவரை பெறப்பட்ட மனுக்களின் விபரங்கள் குறித்து கேட்டறிந்த அவர், மனு அளிக்க வந்த பொது மக்களிடமும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக கலந்துரையாடினார்.
கோரிக்கைகளின் விபரங்கள் கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, அரசு பணிகள் குறித்து, தலைமை செயலர் முருகானந்தத்திடம், முதல்வர் ஆலோசனை நடத்தினார். முக்கியமான கோப்புகளை பார்வையிட்டு, ஒப்புதல் அளித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து, மூன்றாவது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வருக்கு, பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது அண்ணன் அழகிரி சந்தித்து, முதல்வரிடம் நலம் விசாரித்தார்.
பின், அழகிரி கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இரண்டு அல்லது மூன்று நாட்களில், நலமுடன் வீடு திரும்புவார்,'' என்றார்.
பரிசோதனை முடிவு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிர மணியன் கூறியதாவது:
முதல்வர் ரொம்ப நல்லா இருக்கார். உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு ஒருநாள் முன், அவர் உயிராக மதித்த சகோதரர் முத்து மரணமடைந்ததும் காரணமாக உள்ளது. அன்று முழுதும் முதல்வர் சாப்பிடாமல், அங்கேயே இருந்தார்.
மறுநாள் ஒன்றரை கி.மீ., முதல்வர் நடந்த பின் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில், யாராக இருந்தாலும் உடல்நிலை பாதிக்கப்படும். அதுபோன்று தான் முதல்வருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு நாட்கள் பரிசோதனை செய்து முடித்து உள்ளனர். இதற்கான முடிவுகள் கிடைத்த பின், எப்போது வீடு திரும்புவார் என, டாக்டர்கள் கூறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

