அமெரிக்க வரி நெருக்கடியை எதிர்கொள்ள சிறப்பு நிதி நிவாரண தொகுப்பு திட்டம்: பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை
அமெரிக்க வரி நெருக்கடியை எதிர்கொள்ள சிறப்பு நிதி நிவாரண தொகுப்பு திட்டம்: பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை
ADDED : ஆக 17, 2025 02:11 AM

சென்னை: 'அமெரிக்காவின் வரி நெருக்கடியை எதிர்கொள்ள, கொரோனா காலத்தைபோல, சிறப்பு நிதி நிவாரண தொகுப்பு திட்டத்தை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு நேற்று, அவர் அனுப்பிய கடிதம்:
இந்தியா -- அமெரிக்கா இடையே, வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட, மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன்.
31 சதவீதம் ஏற்றுமதி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்துள்ளது. கடந்த நிதியாண்டில், தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான 4 லட்சத்து, 47,200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களில், 31 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின.
அமெரிக்க சந்தையை, தமிழகம் அதிகம் சார்ந்துள்ளது. இதனால், 50 சதவீத வரி தாக்கம் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிகமாக இருக்கும். தமிழகத்தில், ஜவுளி, இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ், ரத்தினக் கற்கள், நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனம் ஆகிய துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2024- - 2025ல் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் 28 சதவீதம் பங்களித்தது. தமிழகத்தில் ஜவுளித் துறை, 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது; 50 சதவீத வரியால், இதில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
அதன் அடிப்படையில் , ஜவுளித் துறைக்கு ஜி.எஸ்.டி ., முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்தல்; முழு வரி விதிப்பையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வருதல்; அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல் ஆகிய நடவடிக்கைகளை, எடுக்க வேண்டும்.
முழு ஒத்துழைப்பு அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 30 சதவீதம் பிணையமில்லாத கடன்களுக்கு, 5 சதவீத வட்டி மானியம் மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை, இரண்டு ஆண்டுகள் நீட்டித்தல்; நுால் உட்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகள், ஜவுளித்துறையை காப்பாற்ற உதவும்.
பிரச்னையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கொரோனா காலத்தைப் போல, அசலைத் திருப்பி செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட, சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்பை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பிரேசில் அரசு, அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய அரசும் ஏற்றுமதியாளர்களை ஆதரிக் க வேண்டியது அவசியம்.
பிரதமர் மோடி, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க, மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.