ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா! நேரில் அழைப்பு விடுத்த அரிட்டாபட்டி மக்கள்
ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா! நேரில் அழைப்பு விடுத்த அரிட்டாபட்டி மக்கள்
ADDED : ஜன 25, 2025 12:03 PM

சென்னை; அரிட்டாபட்டியில் நாளை (ஜன.26) நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஊர் மக்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர், ஊர் மக்களுடன் டில்லி சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
ஊர்மக்கள், போராட்டக்குழுவினர் உள்ளிட்ட பலர் மத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து கொண்டாடினர். இந் நிலையில், டங்ஸ்டன் திட்டம் விவகாரத்தில் தமிழக சட்டசபையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டி மக்கள் நன்றி தெரிவித்து விழா நடத்துகின்றனர்.
அதற்காக முறைப்படி சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அரிட்டாப்பட்டி கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். பின்னர், நிருபர்களை அவர்கள் சந்தித்து பேசும்போது கூறியதாவது;
சாதி, சமயத்தை மறந்து அனைத்து மக்களும் ஒன்றுகூடி பல போராட்டங்களை செய்தாலும் கூட, மத்திய அரசு கடைசியில் தான் இசைந்தது. டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் எண்ணத்தை உருவாக்கியதே முதல்வர் தான்.
திட்டம் ரத்து செய்ய முழு காரணமாக இருந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கோடு, அனைவரும் வந்திருக்கிறோம். எங்களின் மனமார்ந்த நன்றியை முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்தோம்.
எங்கள் பகுதிக்கு நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) வரவேண்டும், பாராட்ட வேண்டும் என்று சொன்னோம். வருகிறேன் என்று சொல்லிவிட்டார். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரிட்டாப்பட்டி மக்களின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜன.26) மதுரை செல்கிறார். குடியரசு தின விழா நிகழ்வுகள் முடிந்த பின்னர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு பயணமாகிறார். பின்னர் சாலை வழியாக அரிட்டாப்பட்டிக்குச் செல்ல உள்ளார்.