'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துடன் சி.எம்.ஆர்.எல்., கையெழுத்து
'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துடன் சி.எம்.ஆர்.எல்., கையெழுத்து
ADDED : ஆக 02, 2025 07:40 PM
சென்னை:சென்னை - விழுப்புரம் உட்பட மூன்று வழித்தடங்களில், 'செமி ஹை ஸ்பீடு ரயில்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சி.எம்.ஆர்.எல்., எனப்படும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய அரசின் பங்களிப்போடு, 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் முதல் கட்டமாக, சென்னை - விழுப்புரம் 170 கிலோ மீட்டர்; சென்னை - வேலுார் 140 கி.மீ., மற்றும் கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம், 185 கி.மீ., வழித்தடத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்வாயிலாக, மணிக்கு, 160 முதல், 200 கி.மீ., வேகத்தில், ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான, சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க, 'பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன்; பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் ராபர்ட் ராஜசேகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ், அசோக் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில், வழித்தடங்களை தரையில் அமைப்பதா அல்லது மேம்பாலம், சுரங்கப்பாதை வழியாக அமைப்பதா என்பது குறித்து ஆராயப்படும்.
அவற்றுக்கான நிலத்தேவைகள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் தோராயமான திட்டச்செலவு போன்றவற்றுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து, நான்கு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என, சென்னை மெட்ரே ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.