வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆய்வு செய்ய அவகாசம் நீட்டிப்பு
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆய்வு செய்ய அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 02, 2025 07:40 PM
சென்னை:வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, ஓராண்டு காலநீட்டிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.
வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியில், அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 2022ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சரியான, நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.
இதையடுத்து, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்க, தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, 2023 ஜனவரி 12ல் தமிழக அரசு உத்தரவிட்டது. மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்னும் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்காக, பலமுறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடைசியாக வழங்கப்பட்ட அவகாசம் ஜூலை, 12ம் தேதியுடன் முடிந்த நிலையில், மீண்டும் ஓராண்டுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.