கூட்டுறவு கொண்டாட்டம் சிறப்பு மளிகை தொகுப்புகள் குறைந்த விலையில் விற்பனை
கூட்டுறவு கொண்டாட்டம் சிறப்பு மளிகை தொகுப்புகள் குறைந்த விலையில் விற்பனை
ADDED : அக் 26, 2024 08:28 PM
சென்னை:கூட்டுறவு அங்காடிகளில், 'கூட்டுறவு கொண்டாட்டம்' பெயரில், 190 ரூபாய்க்கு அதிரசம், முறுக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்களும், 199 ரூபாய் மற்றும் 299 ரூபாய்க்கு தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்புகளும், நாளை முதல் விற்கப்பட உள்ளதாக, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் நடத்தும், 65 அங்காடிகள், 54 பல்பொருள் அங்காடிகளில், 'கூட்டுறவு கொண்டாட்டம்' பெயரில்,மளிகை பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்புகள் விற்கப்பட உள்ளன.
இந்த பொருட்கள், 'பிரீமியம், எலைட்' என, இரு வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
பிரீமியம் தொகுப்பில், 199 ரூபாய்க்கு தலா, 200 கிராம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, 100 கிராம் பொரி கடலை; தலா 25 கிராம் மிளகு, சீரகம்; தலா 50 கிராம் வெந்தயம், கடுகு, சோம்பு; தலா, 100 கிராம் நீட்டு மிளகாய், தனியா, புளி; 150 கிராம் ரவை, 5 கிராம் ஏலம் ஆகியவை இடம்பெறும்.
'எலைட்' தொகுப்பில், 299 ரூபாய்க்கு தலா, 250 கிராம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு; 200 கிராம் பொரி கடலை; தலா, 50 கிராம் மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, சோம்பு; 250 கிராம் நீட்டு மிளகாய், 200 கிராம் தனியா, தலா 100 புளி, ரவை; 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இடம்பெறும்.
இது தவிர, 'அதிரசம் - முறுக்கு காம்போ' என்ற பெயரில், 190 ரூபாய்க்கு தலா, 500 கிராம் பச்சரிசி, பாகு வெல்லம், மைதா மாவு; 5 கிராம் ஏலக்காய், அரை லிட்டர் சமையல் எண்ணெய் விற்கப்பட உள்ளது.
இந்த தொகுப்புகள் அனைத்தும், வெளிச்சந்தையில் கிடைப்பதை விட, குறைந்த விலைக்கே விற்கப்படும். சிறப்பு தொகுப்புகள் விற்பனை, நாளை துவங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.