கோவை, திருச்சி, திருப்பூரும் பங்கு சந்தையில் நிதி திரட்ட அனுமதி
கோவை, திருச்சி, திருப்பூரும் பங்கு சந்தையில் நிதி திரட்ட அனுமதி
ADDED : மே 27, 2025 08:37 PM
சென்னை:கோவை, திருச்சி, திருப்பூர் மாநகராட்சிகளில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு, பங்கு சந்தையில் நிதி திரட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாநகர பகுதிகளில், கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு, அரசால் போதிய நிதி ஒதுக்க முடியவில்லை. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நபார்டு வங்கி, ஜெர்மன் வங்கி உட்பட பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடனுதவி பெற்றே, கட்டமைப்பு பணிகளை அரசு செய்து வருகிறது. இதற்கு ஆண்டுக்கு, 8.75 சதவீதம் வட்டி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், பங்கு சந்தைகள் வாயிலாக நிதி திரட்டும் நடைமுறையை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, வடமாநிலங்களை சேர்ந்த இந்துார், புனே, வாரணாசி உள்ளிட்ட மாநகராட்சிகள் வாயிலாக, நகர்ப்புற நிதி பத்திரங்கள் வெளியிடப்பட்டு, தலா 100 கோடி ரூபாய்க்கும் குறைவாக நிதி திரட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பில், நிதி பத்திரங்கள் வாயிலாக 200 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 7.97 சதவீதம் வட்டி தரப்படுகிறது. இதை தொடர்ந்து, கோவை, திருப்பூர், திருச்சி மாநகராட்சிகள் சார்பாக, பங்கு சந்தையில் நிதி திரட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால், 421 கோடி ரூபாய் அளவுக்கு, நிதி பத்திரங்கள் வாயிலாக சென்னை மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் நிதி மேலாண்மை சிறப்பாக இருந்ததால், இது சாத்தியமானது. ஆனால், முதல் முயற்சி என்பதால், 200 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர், திருச்சி மாநகராட்சிக்கு நிதி பத்திரங்கள் வாயிலாக, தலா 100 கோடி ரூபாய் திரட்ட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரட்டப்படும் நிதியில், நீராதாரங்கள், சாலைப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.