ரயில் போக்குவரத்து துவக்கம் பாம்பன் துாக்கு பாலம் திறப்பு
ரயில் போக்குவரத்து துவக்கம் பாம்பன் துாக்கு பாலம் திறப்பு
ADDED : ஏப் 07, 2025 01:09 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதி கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில், ரயில் போக்குவரத்தை கொடியசைத்து நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பாலத்தைக் கடந்து கப்பல்கள் செல்ல ஏதுவாக கட்டப்பட்டுள்ள துாக்கு பாலத்தையும் ரிமோட் வாயிலாக திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் செலவில் அமைத்த புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க, பிரதமர் மோடி இலங்கையில் இருந்து இந்திய விமானப்படையின் எம்.ஐ., 17 என்ற ஹெலிகாப்டரில், நேற்று மதியம் 12:10 மணிக்கு ராமேஸ்வரம் அருகே மண்டபம் வந்திறங்கினார்.
பிரதமரை, தமிழக கவர்னர் ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர், பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு மதியம், 12:40 மணிக்கு வந்தார். அங்கு புதிய ரயில் பாலத்தில், சென்னை தாம்பரம் - ராமேஸ்வரம் புதிய ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கினார்.
தொடர்ந்து, ரிமோட் வாயிலாக, புதிய செங்குத்து துாக்கு பாலத்தை திறந்து வைத்து, இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல், பாலத்தை கடந்து செல்வதை பார்வையிட்டார்.
பின், அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி மதியம் 1:25 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தார். பிரதமருக்கு, கோவில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு அபிஷேக பூஜையில் பிரதமர் மோடி 8 மற்றும் 5 நிமிடங்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தார்.
பின், மதியம் 1:55 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, அரசு நிகழ்ச்சி நடைபெற்ற விழா மேடைக்கு சென்றார்.

