தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கும் வணிக வரி துறை நோட்டீஸ்
தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கும் வணிக வரி துறை நோட்டீஸ்
ADDED : ஜன 23, 2025 12:09 AM
திருப்பூர்:குறு, சிறு வர்த்தகர்கள் மற்றும் சேவை அளிப்போரில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக அதிக தொகை பெற்றவர்களுக்கு, வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
இதனால், தமிழகம் முழுதும் உள்ள சிறு, குறு வர்த்தகர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.
திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:
யு.பி.ஐ., பரிவர்த்தனை
ஜி.எஸ்.டி., பதிவு செய்து, ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேவை அளிப்போரும் முறைப்படி கணக்கு தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு கீழ் சேவையும், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகமும் செய்வோர் ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டியதில்லை.
குறு, சிறு அளவில் தள்ளுவண்டி காய்கறி, துணி, உணவு, விவசாய இடுபொருள், அழகு சாதனம் உட்பட பல்வேறு வகை விற்பனை, பண பரிவர்த்தனை, காப்பீடு, இ-சேவை மையம், வாகனங்கள் பழுது நீக்குதல் போன்ற சேவை அளிப்போர், யு.பி.ஐ., பரிவர்த்தனை முறையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., பதிவு செய்யாத, ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல், யு.பி.ஐ., வாயிலாக பரிவர்த்தனை மேற்கொண்ட வியாபாரிகள் மற்றும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேவை அளிப்போரின் கணக்குகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
வரி ஏய்ப்பு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கணக்கு விபரங்கள்
இதனால், வியாபாரிகள் பயப்பட தேவையில்லை. கொள்முதல் செய்த பொருளின் மதிப்பு, விற்பனை செய்த பொருளின் மதிப்பு அடங்கிய, வரவு - செலவு கணக்கு விபரங்களை வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசு, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி வருகிறது.
எனவே, வணிக வரித்துறை, யு.பி.ஐ., பரிவர்த்தனை சார்ந்து அனுப்பப்படும் நோட்டீஸ் சார்ந்து, வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தி, அச்சத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.