குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடு கொண்டு வர குழு அமைப்பு
குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடு கொண்டு வர குழு அமைப்பு
ADDED : ஜன 14, 2025 03:30 AM
சென்னை: குடியிருப்புகளுக்கு அருகே, டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பாக கட்டுப்பாடுகள் கொண்டு வர, டி.ஜி.பி., தலைமையில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரை சேர்ந்த கிருத்திகா என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், 'குடியிருப்பு அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் பெரியளவில் தொந்தரவு ஏற்படுகிறது. எனவே, அந்த கடையை அகற்றும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று, கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகினர்.
இதையடுத்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''ஏற்கனவே கல்வி நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில், டாஸ்மாக் கடைகள் அமைக்க கட்டுப்பாடுகள் உள்ளன. அதில், முழு அளவிலான குடியிருப்பு பகுதிகளையும் இணைத்து கட்டுப்பாடுகளை விதிக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்,'' என்றார்.
'அந்த குழுவில் யார் யார் எல்லாம் இடம் பெற்றுள்ளனர்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'மதுவிலக்கு துறை இணை கமிஷனர், சென்னை மாவட்ட கலால் துறை துணை கமிஷனர், டாஸ்மாக் துணை பொது மேலாளர், டாஸ்மாக் சட்ட அதிகாரி, செங்கல்பட்டு மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதிலளித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இக்குழுவில், தமிழக டி.ஜி.பி., அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் ஆகியோரை இணைக்க வேண்டும்.
இக்குழுவுக்கு டி.ஜி.பி., தலைவராக செயல்பட்டு, ஆறு வாரங்களுக்குள் முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்., 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

