ஜி.எஸ்.டி.,யை குறைக்காத நிறுவனங்கள்: விக்கிரமராஜா புகார்
ஜி.எஸ்.டி.,யை குறைக்காத நிறுவனங்கள்: விக்கிரமராஜா புகார்
ADDED : செப் 29, 2025 01:58 AM
புதுக்கோட்டை:''மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யை குறைத்த பின்னரும், சில நிறுவனங்கள் விலையை குறைக்காமல் மக்களுக்கு சரக்குகளை அனுப்புகின்றன,'' என, புதுக்கோட்டையில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
நேற்று அவர் கூறிய தாவது:
மத்திய அரசு ஜி.எஸ்.டி.,யை குறைத்துள்ளது. அதன் பின்னரும், சில நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.,யை குறைக்காமல் மக்களுக்கு சரக்குகளை அனுப்புகின்றன. இதே நிலை தொடர்ந்தால், அந்த நிறுவனங்களின் பொருட்களை வணிகர்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இனியொரு கரூர் சம்பவம் நடக்காமல் இருக்க, ரோடு ஷோ உள்ளிட்டவைகளுக்கும், அரசியல் கட்சிகள் முக்கியமான வணிகப்பகுதிகளில், குறுகலான பகுதிகளில் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்குவதை, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
தொடர்ந்து, பண்டிகை காலங்கள் வருவதால், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது. இதுபோன்று நடக்கும் கூட்டங்களில் வணிகர்கள் சொத்துக்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சம்பந்தப்பட்ட பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து அபராதம் வசூல் செய்து வழங்க வேண்டும்.
பண்டிகை காலங்களில் வணிகர்களை மிரட்டி, ஒரு சில அதிகாரிகள் பண வசூல் செய்கின்றனர். இதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.