துணை சபாநாயகர் தாக்கியதாக புகார் கூறியவர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்
துணை சபாநாயகர் தாக்கியதாக புகார் கூறியவர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்
UPDATED : நவ 14, 2026 10:45 PM
ADDED : நவ 14, 2026 10:42 PM
திருச்சி: தமிழக துணை சபாநாயகர் ரவிசங்கரால் தாக்கப்பட்டவரை, வரும், 16ம் தேதி காலை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தமிழக துணை சபாநாயகரும், துறையூர் த.வெ.க., – எம்.எல்.ஏ.,வுமான ரவிசங்கரை, கடந்த தீபாவளியன்று இரவு சந்திக்க, துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார், 48, என்பவர் சென்றார்.
அப்போது, ரவிசங்கர், அவரை தாக்கியதாக வீடியோ வெளியானது. காயமடைந்த கார்த்திக்குமார், மண்ணச்சநல்லுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்தபோது, அங்கு வந்த மண்ணச்சநல்லுார் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி, அவரை மிரட்டி, துணை சபாநாயகர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து, துணை சபாநாயகர் தன்னை அடிக்கவில்லை என்று கூறிய கார்த்திக்குமார், அடுத்தநாள் துறையூர் வந்த பின், தன்னை துணை சபாநாயகர் தாக்கியது உண்மை, இன்ஸ்பெக்டரும், துணை சபாநாயகரும் மிரட்டி, அப்படி பேச வைத்தனர் என்று கூறினார்.
பின், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்த விஷயம் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அனைவரும் துணைசபாநாயகரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை பதவி நீக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான கார்த்திக்குமாரை, வரும், 16ம் தேதி, காலை, 10.00 மணிக்கு, திருச்சி எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள தலைமையிட போலீஸ் ஏ.டி.எஸ்.பி., முன் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
