படிக்காத கல்விக்கு சான்றிதழ் பயிற்சி மையம் மீது புகார்
படிக்காத கல்விக்கு சான்றிதழ் பயிற்சி மையம் மீது புகார்
UPDATED : நவ 21, 2026 06:27 PM
ADDED : நவ 21, 2026 06:27 PM
துாத்துக்குடி: படிக்காத கல்விக்கு சான்றிதழ் வழங்கியதாக தனியார் பயிற்சி மையம் மீது, மாணவியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் ‘தமிழ் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்’ என்ற பெயரில், தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2021ல் ‘பி.எஸ்.சி., லேப்’ என்ற பிரிவில் சேர்ந்த, 16 மாணவியருக்கு மூன்றாண்டு படிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதில், சேர்க்கையின்போது தெரிவித்த பி.எஸ்.சி., லேப் என்ற படிப்பிற்கு பதிலாக, ‘பி.வொகேஷனல் லேப்’ என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். பயிற்சி மைய நிர்வாகத்திடம் அவர்கள் முறையிட்டபோதும் உரிய பதில் அளிக்காததால், 16 மாணவியரும் தங்களது பெற்றோருடன் சென்று, நேற்று விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், ‘எங்களது சான்றிதழ்களில் பி.எஸ்சி. என்பதற்கு பதிலாக பி.வொகேஷனல் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த படிப்பிற்கு ஆண்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், நாங்கள் ஆண்டிற்கு, 41 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளோம். விளக்கம் கேட்டதற்கு, பயிற்சி நிறுவனத்தினர், ‘சான்றிதழ் இப்படித்தான் வழங்க முடியும்; உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்’ என மிரட்டுகின்றனர்’ என, தெரிவித்துள்ளனர்.
போலீசார், பல மணி நேரம் அலைக்கழித்த பிறகு, மாணவியரிடம் புகார் மனுவை பெற்று கொண்டனர்.
