காக்கா ஆழி அழிப்பில் ஒத்துழைப்பில்லை நீர்வளம், மீன்வள துறைகள் மீது புகார்
காக்கா ஆழி அழிப்பில் ஒத்துழைப்பில்லை நீர்வளம், மீன்வள துறைகள் மீது புகார்
ADDED : ஆக 21, 2025 01:38 AM

சென்னை:'காக்கா ஆழியை அழிப்பதில் நீர்வளம், மீன்வள துறைகள் ஒத்துழைக்கவில்லை' என, தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
'தென் அமெரிக்க மஸ்ஸல்' எனப்படும், 'காக்கா ஆழி' வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரிகள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை அழிக்க உத்தரவிடக் கோரி, குமரேசன் சூளுரன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, காக்கா ஆழியை அகற்றுவதற்கான சாத்தியமான தீர்வை, மாநில சதுப்பு நில ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சீனிவாஸ் ரெட்டி வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
அதன்படி தீர்ப்பாயத்தில், சீனிவாஸ் ரெட்டி தாக்கல் செய்த அறிக்கை:
சென்னை அருகே, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் பரவியுள்ள காக்கா ஆழியை அகற்ற, தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர், காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு பகுதிகளில் காக்கா ஆழியை அழிக்கும் பணிகளை துவங்குமாறு, நீர்வளத் துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இதற்காக, 90 கோடி ரூபாயிலான திட்டத்தை, நீர்வளத்துறை உருவாக்கியுள்ளது. இதற்கான நிதியை ஒதுக்கி, காக்கா ஆழியை அழிக்கும் பணியை துவங்குமாறு, நீர்வளத்துறைக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை. காக்கா ஆழியால் மீன்வளம் அழிந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, காக்கா ஆழியை அழிக்க, மீன்வளத் துறைக்கும் பொறுப்பு உள்ளது. ஆனாலும், கழிமுகப் பகுதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை துார்வாரி காக்கா ஆழியை அழிப்பதில், நீர்வளத்துறைக்கு, மீன்வளத்துறை ஒத்துழைக்கவில்லை.
காக்கா ஆழியை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்மாதிரி ஆய்வை, பொன்னேரியில் உள்ள எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரி மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

