ADDED : ஆக 11, 2025 03:44 AM

சென்னை : 'சனாதனம் குறித்து பேசிய நடிகரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கமல் கழுத்தை அறுப்போம்' என, கொலை மிரட்டல் விடுத்த 'டிவி' சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் மீது, கமல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா குடும்பத்தினர், 'அகரம் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை வாயிலாக, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியரை படிக்க வைத்து வருகின்றனர்.
கடந்த 3ம் தேதி, சென்னையில் அகரம் பவுண்டேஷனின் 15ம் ஆண்டு விழா நடந்தது. இதில், கமல் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், சனாதன சங்கிலியை அறுப்போம்' என்று கூறினார்.
அவரது பேச்சுக்கு, 'டிவி' சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார். 'டிவி' தொடர்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார். அந்த பேட்டியில், ஹிந்து மதம் குறித்து விமர்சனம் செய்வோரை கடுமையாக சாடியும் வருகிறார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.,யுமான மவுரியா, கவிஞர் சிநேகன் உள்ளிட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சனாதனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, எங்கள் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கமலின் சங்கை, அதாவது கழுத்தை அறுப்போம் என, 'டிவி' சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.