'அபார்ட்மென்ட்' சங்கங்களை பதிவு செய்ய அலைக்கழிப்பு சார் - பதிவாளர்கள் மீது புகார்
'அபார்ட்மென்ட்' சங்கங்களை பதிவு செய்ய அலைக்கழிப்பு சார் - பதிவாளர்கள் மீது புகார்
ADDED : அக் 03, 2025 01:55 AM
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு வீட்டு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதில், மாவட்ட பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துஉள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கள் அதிகரித்துள்ளன. இதில் வீடு வாங்குவோர் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து, அதை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி, 1975ம் ஆண்டு தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் இதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், 2022ல் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
புகார் இந்த சட்டத்தின்படி, மாவட்ட பதிவாளர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் தான் அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்காக, பதிவுத் துறையின், 'ஸ்டார் 2.0' மென்பொருளில், சங்கங்களை பதிவு செய்வதற்கான, 'ஆன்லைன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மண்டலங்களில் இந்த வசதி மாவட்ட பதிவாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், பிற மாவட்டங்களில் புதிய சங்கங்கள் பதிவு விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. விண்ணப்பித்தவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அடுக்கு மாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு வாங்கியவர்கள் புதிதாக சங்கத்தை பதிவு செய்ய, மாவட்ட பதிவாளர் அலுவலகங்களை அணுகுகின்றனர்.
இதற்கான பணியில், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் சார் - பதிவாளர்கள், சங்க பதிவு பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை.
நடவடிக்கை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே, ஆன்லைன் முறையில் சங்க ஆவணங்களை அதிகாரிகள் பதிவேற்றம் செய்கின்றனர், மதுரை, திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் வசதி வேலை செய்யவில்லை என்று கூறி, விண்ணப்பங்களை அதிகாரிகள் கிடப்பில் போடுகின்றனர்.
பிற மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சங்கங்களை பதிவு செய்வதில், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தினர் உரிய முறையில் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்கள் நேரடியாக சங்க பதிவு மற்றும் புதுப்பிப்பு ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் வசதியை, பதிவுத் துறை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.