தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மீண்டும் குழப்பம்!

மீண்டும் குழப்பம்!

மீண்டும் குழப்பம்!


UPDATED : அக் 12, 2026 09:47 PM

ADDED : அக் 12, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:47 PM ADDED : அக் 12, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் மீண்டும் குழப்பம் வெடித்துள்ளது. தொடர்ந்து தோல்வி முகம் காணும் பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, அதிருப்தி கோஷ்டியினர் அணி திரண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., எந்த தேர்தலிலும் முழு வெற்றி பெறவில்லை; கடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில், 107 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் எனவும், த.வெ.க.,வுடன் கூட்டணி சேரலாம் எனவும், அ.தி.மு.க.,வுக்குள் இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. இதில் மோதல் உருவாகி, பழனிசாமி அணி, அதிருப்தியாளர்கள் அணி என, இரண்டாக உடைந்தது கட்சி.

அதிருப்தியாளர்கள் அணியை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் வழி நடத்தினர். இரு தரப்பையும் பிடிக்காத பலர், த.வெ.க., - தி.மு.க.,வுக்கு ஓடினர். அதனால், பழனிசாமி - வேலுமணிக்கு இடையேயான பிளவை ஒட்டவைக்க பேச்சு நடத்தப்பட்டது; அதில், எதுவுமே கைகூடவில்லை.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள, அதிருப்தி அணியினர் வியூகம் அமைத்து வருகின்றனர்.

அதன்படி, சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை செய்தனர். அதே நேரத்தில் பழனிசாமியும் தன் தரப்பை பலப்படுத்த, நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி வருகிறார்.

இது குறித்து, முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியதாவது:

பழனிசாமி தலைமையில் சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி அடைந்து வருகிறோம். அதனால், இடைத்தேர்தல் முடிவை பெரிதும் எதிர்பார்த்தோம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், கட்சியை காப்பாற்ற முடியும் என்ற கட்டாய சூழல் இருந்தது.

ஆனால், அதில் அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவு, கட்சிக்குள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் தொகுதியில் பா.ம.க.,வின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், அ.தி.மு.க., மூன்றாமிடம் சென்றிருப்பதை கூட, ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், தாராபுரம் தோல்வி, அ.தி.மு.க.,வின் உண்மை நிலையை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. தாராபுரத்தில் 40 சதவீதத்தில் இருந்த கட்சி ஓட்டு வங்கி, தற்போது 25 சதவீதமாக சரிந்து விட்டது. இதன் வாயிலாக, தென் மாவட்டங்களை போல கொங்கு மண்டலத்திலும் அ.தி.மு.க., வலுவிழந்த நிலைக்கு போய் விட்டது.

அதேபோல, வட மாவட்டங்களில் பா.ம.க., இல்லையென்றால், இனி அ.தி.மு.க., வெற்றி பெறவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. த.வெ.க.,வுடன் செல்ல பா.ம.க.,வும் தயாராக இருக்கிறது. அ.தி.மு.க.,வின் இந்த அவலநிலைக்கு பழனிசாமியே காரணம் என, பலரும் கருதுகின்றனர். இடைத்தேர்தலில் கூட கட்சியினரை ஒருங்கிணைக்க அவரால் முடியவில்லை; பா.ம.க.,வின் ஆதரவையும் பெற முன்வரவில்லை.

இனியும் பழனிசாமி கையில் கட்சி இருந்தால், அ.தி.மு.க., தடம் தெரியாமல் போய் விடும். அவர் பொதுச்செயலராக இருக்கும் வரை, அ.தி.மு.க.,வுக்கு தோல்வி முகம் தான் என, கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தி அணியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த கருத்தை முன்வைத்து, எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளுடன் வேலுமணி தரப்பு ஆதரவு திரட்டி வருகிறது. வேலுமணியின் முன்னெடுப்புக்கு முன்னர் ஆதரவு தெரிவிக்காத டில்லி பா.ஜ., மேலிடம், தற்போது பழனிசாமிக்கு எதிரான காய் நகர்த்தலுக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரிகிறது.

இருப்பினும், பொதுச்செயலர் பதவியிலிருந்து பழனிசாமியை துாக்குவது எளிதான காரியம் அல்ல என்பதால், எம்.எல்.ஏ.,க்கள் பலத்தை வைத்து, சட்டசபைக்குள் பழனிசாமியை வீழ்த்த, அதிருப்தி கோஷ்டியினர் வியூகம் அமைத்துள்ளனர்.

அதாவது, பழனிசாமிக்கு எதிரான அணியில் இதுவரை 26 எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 41 எம்.எல்.ஏ.,க்களில், 26 பேர் இருந்தாலே, 'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க.,' என, சட்டசபையில் வேலுமணி தரப்பினர் உரிமை கோர முடியும்; அதற்கான வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை சென்னைக்கு வரவழைத்து, ஆதரவு கடிதம் பெறும் வேலை நடந்து வருகிறது. அதேநேரத்தில், பழனிசாமியும் தன் தரப்பை பலப்படுத்த, எம்.எல்.ஏ.,க்களிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்; தன்னை சந்திக்க சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்; தன்னோடு இருந்தால், மாவட்டச் செயலர் உள்ளிட்ட பதவிகள் கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்து வருகிறார்.

கடந்த முறை இது போன்ற குழப்பம் ஏற்பட்ட போது, 'எப்படியாவது இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடலாம்; அதன்பின், எல்லா பிரச்னைகளும் சரியாகி விடும்' என்று கூறி சமாளித்தார்.

தற்போது, இடைத்தேர்தல் தோல்வி குறித்து, எம்.எல்.ஏ.,க்களும் நிர்வாகிகளும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், பழனிசாமி தரப்பு தடுமாறி வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us