தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு; கொடிக்கம்பம் சரிந்து விபத்து
தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு; கொடிக்கம்பம் சரிந்து விபத்து
ADDED : ஆக 20, 2025 04:46 PM

மதுரை: மதுரை பாரபத்தியில் நடக்கவுள்ள த.வெ.க., மாநாட்டில் இன்று கொடிக்கம்பம் நிறுவும் போது சரிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.
மதுரை பாரபத்தியில் நாளை (ஆக., 21) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த 100 அடி கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் கார் நொறுங்கியது. காரின் உள்ளே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கொடிக்கம்பம் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகி நிர்மல் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புடன் கொடிக்கம்பம் நாட்டும் பணி மேற்கொண்ட போது கிரேனின் பெல்ட் தாங்காததால் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இது ஒரு சிறிய விபத்து. இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை. மாற்று ஏற்பாடு தலைமையுடன் பேசி முடிவெடுக்கப்படும். ஏற்பாடு பணிகளில் எந்தத் தொய்வும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.