காமராஜர் மீதான அவதுாறு; கேள்வி கேட்க முடியாத காங்., பா.ஜ., நாகேந்திரன் கிண்டல்
காமராஜர் மீதான அவதுாறு; கேள்வி கேட்க முடியாத காங்., பா.ஜ., நாகேந்திரன் கிண்டல்
UPDATED : ஜூலை 21, 2025 11:27 AM
ADDED : ஜூலை 21, 2025 04:13 AM

அரியலுார்: ''கும்பகோணத்தில் இருந்து, ஜெயங்கொண்டம் வழியாக அரியலுாருக்கு ரயில் பாதை அமைக்க,பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலில், மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, வரும் 23ல் தொடங்கி, 27 வரை நடக்கிறது.
நிறைவு நாளான 27ம் தேதி, பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரை வரவேற்பது குறித்து, பா.ஜ., சார்பாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பேசுகையில், “மாமன்னர் ராஜேந்திர சோழன், மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய இடத்திற்கு, ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரதமர் மோடி வருகிறார்.
''கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலுார் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும் எனும், இப்பகுதி மக்களின் கோரிக்கையை, பிரதமரிடம் தெரிவிப்போம்.
''பிரதமர் வருகையை எதிர்த்து, கருப்பு கொடி காட்டுவதாக கூறும் காங்கிரஸ் கட்சியினரால், காமராஜரை பற்றி தி.மு.க.,வினர் கடுமையாக அவதுாறு கிளப்பி பேசியதற்கு எதுவும் செய்ய முடியவில்லை; இப்படி கையாலாகாதவர்கள் தான், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக பூச்சாண்டி காட்டுகின்றனர்,” என்றார்.
இதையடுத்து, கும்பகோணத்தில், அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி விவகாரத்தில், அனைத்து விஷயங்களையும். மத்திய அமைச்சர் அமித் ஷாவும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், பேசி முடிவு எடுப்பர்.
இதில், எவ்வித குழப்பமும் கிடையாது. அமித் ஷா, பழனிசாமி என்ன சொல்கின்றனரோ, அதன்படி நாங்களும் கேட்போம். வரும் 2026 தேர்தலில், தேசிய ஜனநாய கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ஆசிரியர் பணியிடம் அதிக அளவில் காலியாக இருப்பதால், ஆதி திராவிட மாணவர்கள் கல்வி பயில்வது படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 97,000 மாணவர்கள் படித்த நிலையில், தி.மு.க., ஆட்சியில், 65,000 ஆதி திராவிட மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அனைத்திலும் தி.மு.க., அரசு பின்னோக்கி சென்றுள்ளது. வரும் 2026 தேர்தலிலும் பின்னோக்கி செல்லும்.
இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.