'இண்டியா கூட்டணிக்கு வாங்க' விஜய்க்கு காங்கிரஸ் அழைப்பு
'இண்டியா கூட்டணிக்கு வாங்க' விஜய்க்கு காங்கிரஸ் அழைப்பு
ADDED : ஜன 18, 2025 07:59 PM
சென்னை:'இண்டி' கூட்டணியில் இணையுமாறு த.வெ.க., தலைவர் விஜய்க்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்த நாளான நேற்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு, செல்வபெருந்தகை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்ல, இந்தியாவிலேயே இருக்கக்கூடாது என, அவர் காலத்தில் மிக தீவிரமாக செயல்பட்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி. த.வெ.க., தலைவர் விஜய் பரந்துார் செல்ல, காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அங்கு இருக்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே காங்கிரஸ் நிலைப்பாடு.
மதவாத சக்திகளையும் சனாதனத்தைம் எதிர்த்தே அரசியல் செய்யப் போவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதை தன் கட்சி மாநாடு வாயிலாகவும் தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளார். அதுதான் அவர் அரசியல் நிலைப்பாடு என்றால், அவர் இருக்க வேண்டிய கூட்டணி 'இண்டியா' கூட்டணி; அந்த வகையில், அவர் இந்தக் கூட்டணிக்குத்தான் வர வேண்டும். அதுதான், அவருடைய கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் நல்ல முடிவாக இருக்கும். ஆனால், அவரை கூட்டணியில் ஏற்பது குறித்து, இண்டியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

