காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்
காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்
ADDED : ஆக 29, 2025 06:05 PM

திருவள்ளூர்: தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை வழங்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
2018 ல் சமக்ர சிக்க்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் சேர்க்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் இணையாதால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். திருவளளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய பாஜ அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்க்ஷா நிதி ரூ. 2,152 கோடியை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து, மிகுந்த வேதனையுடனும், அதை விட பல மடங்கு அதிகமான உறுதியுடனும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை துவங்குகிறேன் எனக்கூறியுள்ளார்.