விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் மீது காங்.,வைக்க வேண்டும்: அண்ணாமலை
விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் மீது காங்.,வைக்க வேண்டும்: அண்ணாமலை
UPDATED : ஜன 19, 2025 04:54 AM
ADDED : ஜன 19, 2025 04:51 AM

மதுரை: ''த.வெ.க.,தலைவர் விஜய் 'இண்டியா' கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் மீது வைக்க வேண்டும்,'' என பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
த.வெ.க., தலைவர் விஜய் 'இண்டியா' கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் மீது 10 சதவீதமாவது வைக்க வேண்டும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ கூட்டணிக்காக விஜய்க்கு அழைப்பு விடுத்தார். அதே வேலையை செல்வப்பெருந்தகை செய்கிறார்.
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பெருமை. அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, அவரது மகன் இன்பநிதி பங்கேற்றதில் தவறில்லை. இன்பநிதியை முதல் வரிசையில் அமர வைத்தது தான் தவறு. தனக்கான இருக்கையை ஏன் கலெக்டர் விட்டுக் கொடுத்தார். அது தவறு. இருக்கையைக்கூட காப்பாற்ற முடியாதவரிடமிருந்து சாமானிய மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்.
எந்த துறையிலும் உதயநிதிக்கு அடிப்படை அறிவு இல்லை. அவரை அவரது தந்தையின் அடையாளத்துடன் முன்னிலைப்படுத்துகின்றனர். தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான்யூ. அவருக்கு தொலை நோக்கு பார்வை இருந்தது. அறிவாளி. அதிகாரிகளை வேலைவாங்கத் தெரிந்தவர். அதுபோன்ற தலைவர் தமிழகத்திற்கு தேவை. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் மாற்றம் வரும். தே.ஜ.,கூட்டணி ஆட்சியில் அமரும்.
தி.மு.க.,வால் பிரச்னை
திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படை வீடு. சிக்கந்தர் மலை என சிறுபான்மை மக்கள் கூறுகின்றனர். இவ்விவகாரத்தில் குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது தி.மு.க., அரசு.
மதுரையில் உலகளாவிய தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றேன். இதனால் தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. இவ்வாறு கூறினார்.
காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்துடன் கவர்னர் ரவி திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். இது குறித்து தி.மு.க.,விமர்சனம் செய்வது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, ''திருக்குறளில் ஆன்மிக கருத்துக்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆரியர்களின் கைக்கூலி; அத்தகைய கருத்துக்கள் திருக்குறளில் திணிக்கப்பட்டுள்ளது,' என்றார் ஈ.வெ.ரா. அவரது வழியில் வந்த தி.மு.க., திருவள்ளுவர் பற்றி பேசத் தகுதியில்லை என்றார்.

