தொடர் உண்ணாவிரதம்தான் மீனவர் பிரச்னைக்கான ஒரே தீர்வு அரசுக்கு காங்கிரஸ் யோசனை
தொடர் உண்ணாவிரதம்தான் மீனவர் பிரச்னைக்கான ஒரே தீர்வு அரசுக்கு காங்கிரஸ் யோசனை
ADDED : ஏப் 03, 2025 01:29 AM

சென்னை:''மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, தொடர் உண்ணாவிரதப் போராட்டம்தான் ஒரே வழி,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது:
கடந்த 2021 - -22ம் ஆண்டில் பாசனத்திற்காக, சுமார் 1.81 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது போதுமானது அல்ல. விவசாயத்திற்கான மின் இணைப்பு வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும்.
விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு, அரசே வழங்க வேண்டும்.
காப்பீடு தவிர்ப்பு
ஒரு மூட்டை உரத்தின் விலையை விட, ஒரு மூட்டை நெல்லின் விலை குறைவாக உள்ளது. நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க, தமிழக அரசின் ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை. நடப்பாண்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதையே தவிர்த்துள்ளனர்.
இது ஏன் என்பதை கண்டறிந்து, தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்களை சீர்செய்ய, ஏரி, குளங்களில் மண் எடுக்க, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் அனுமதிக்க வேண்டும்.
நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்களுக்கு, இலங்கை நீதிமன்றம் அபராதம் விதிக்கிறது.
'கடல் ஆம்புலன்ஸ்'
இப்பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த, காங்கிரஸ் தயாராக உள்ளது.
இதில், 'இண்டி' கூட்டணி கட்சிகள் பங்கேற்க வேண்டும். இப்பிரச்னையில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதுதான் ஒரே வழி. கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது, உடல்நல பாதிப்புகள் ஏற்படும் மீனவர்களைப் பாதுகாக்க, 'கடல் ஆம்புலன்ஸ்' ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

