ADDED : நவ 08, 2025 02:33 AM
- டில்லி சிறப்பு நிருபர் -: தமிழ் திரைப்பட நடிகர் ரவி மோகன் மீது, மதுபான நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டுள்ளது.
ஜெயம் எனும் தமிழ் திரைப்படம் வாயிலாக புகழ் பெற்றவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தன் பெயரை சமீபத்தில் ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில், ப்ரோ கோடு எனும் பெயரில் தமிழ் திரைப்படத்தை நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடித்து வருகிறார்.
இந்நிலையில், ப்ரோ கோடு எனும் பெயர், தங்கள் மதுபானத்தின் வணிக முத்திரை என்றும், தங்கள் அனுமதியின்றி இந்த பெயரை பட நிறுவனம் பயன்படுத்தி இருப்பதாகவும், டில்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விசாரணையின் போது, ப்ரோ கோடு எனும் பெயரில் வர்த்தக முத்திரை கேட்டு, மதுபான நிறுவனம் தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் நிலுவையில் இருப்பதை சுட்டி காட்டிய உயர் நீதிமன்றம், திரைப்படத்திற்கு ப்ரோ கோடு எனும் பெயரை வைப்பதை தடுக்க முடியாது என உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, ப்ரோ கோடு எனும் பெயருக்கான வணிக முத்திரை உறுதியை பெறுவதற்காக டில்லி உயர் நீதிமன்றத்தில் மதுபான நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், ஒரே மாதிரியான வணிக முத்திரையை பயன்படுத்துவது விதிமீறல் மட்டுமில்லாமல் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கு முடியும் வரை திரைப்படத்தின் விளம்பரங்களில் ப்ரோ கோடு என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதித்தது.
ஆனால், டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை நடிகர் ரவி மோகன் மீறிவிட்டதாக கூறி, அவருக்கு எதிராக மதுபான நிறுவனம் சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

