ADDED : ஜன 09, 2025 10:49 PM
சென்னை:பா.ஜ., எதிர்ப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகள் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக, கவர்னர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.சி.ஜி., வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தனி தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அதன் மீது நடந்த விவாதத்தில் பேசிய, தமிழக வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், பிரதமரை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இதற்கு பா.ஜ., - நயினார் நாகேந்திரன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே முதல்வர் ஸ்டாலின் எழுந்து, அந்த வார்த்தையை நீக்க வலியுறுத்தினார்.
இதையடுத்து, வேல்முருகன் தெரிவித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகள் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

