விரைவு தரிசன கட்டணம் குறித்த சர்ச்சை: திருச்செந்துார் கோவில் நிர்வாகம் மறுப்பு
விரைவு தரிசன கட்டணம் குறித்த சர்ச்சை: திருச்செந்துார் கோவில் நிர்வாகம் மறுப்பு
ADDED : செப் 27, 2024 07:39 AM

துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கந்த சஷ்டி விழா. இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா, நவ., 2ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கிறது. 7ம் தேதி நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில், 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சஷ்டி விழாவின் போது, விரைவு தரிசன கட்டணமாக, பக்தர்களிடம் இருந்து, 1000 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இந்த ஆண்டும் சஷ்டி விழா நாட்களில் விரைவு தரிசன கட்டணம் என்ற பெயரில், 1,000 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, பெயரளவில் பக்தர்களிடம் இருந்து ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறும் ஒரு அறிவிப்பு நேற்று கோவில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. வரும் 3ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கோவில் தக்கார், இணை கமிஷனர் பெயர் இருந்த இடத்தில், எந்தவித கையெழுத்தும் இல்லை. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பல்வேறு அமைப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்ததால், திடீரென அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த பேப்பர் மாயமானது.
கடந்தாண்டை போல, 1,000 ரூபாய் விரைவு தரிசன கட்டணம் கொண்டு வரப்படுவதாக உள்துறை அலுவலகத்தில் அறிவிப்பாணை ஒட்டப்பட்டிருந்தது, பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் இல்லை என, கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கோவில் தக்கார் அருள்முருகன் கூறியதாவது:
கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டணமில்லா முறை மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் என இரண்டு வரிசை மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் போது, 1,000 ரூபாய் விரைவு தரிசன கட்டணம் அமல்படுத்த, கோவில் நிர்வாகத்தால் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அப்படி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.