ஒரே பயிருக்கு இரு வங்கிகளில் கடன் பெறுவதை தடுக்க 'சிபில் ஸ்கோர்' விபரத்தை அலசும் கூட்டுறவு வங்கிகள்
ஒரே பயிருக்கு இரு வங்கிகளில் கடன் பெறுவதை தடுக்க 'சிபில் ஸ்கோர்' விபரத்தை அலசும் கூட்டுறவு வங்கிகள்
ADDED : ஜூலை 09, 2025 10:04 PM
சென்னை:'ஒரே நிலத்தில் ஒரே பயிருக்கு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கியில் இரு கடன்கள் வாங்குகின்றனர். அதனால் தான், பயிர் கடன் வழங்கும்போது, 'சிபில் ஸ்கோர்' பார்க்க அறிவுறுத்தப்பட்டது. இதனால், பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை' என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் 3 லட்சம் ரூபாய் வரை பயிர் கடன் வழங்கப்படுகிறது.
உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு, வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. வணிக வங்கிகளில் பயிர் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு, மத்திய அரசு வட்டி மானியம் வழங்குகிறது.
இதற்காக சிலர், ஒரே நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள ஒரு பயிருக்கு, இரு வங்கிகளில் பயிர் கடன் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.
அதனால், பயிர் கடன் கேட்கும் விவசாயிகளின் சிபில் ஸ்கோர் விபரம், கூட்டுறவு வங்கிகளில் பரிசீலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வட்டி மானியம்
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்படுகின்றன.
உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளின் 7 சதவீத வட்டியில், 3 சதவீதத்தை மத்திய அரசும், 4 சதவீத வட்டியை தமிழக அரசும் ஏற்கின்றன.
கூட்டுறவு சங்கங்கள், மத்திய அரசின் வட்டியை தள்ளுபடி செய்துவிட்டு, அந்த தொகையை மத்திய அரசிடம் இருந்து வாங்குகின்றன. வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு, அரசால் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு, 2023 - 24 முதல், 1.50 சதவீதம் வட்டி மானியம் மற்றும் உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு, வட்டி ஊக்கத்தொகை 3 சதவீதத்தை, 'கிசான் ரின் போர்டல்' வாயிலாக அனுமதிக்கிறது.
அதன்படி, பயிர் கடன் வழங்குவோரின் விபரங்கள், இந்த போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும். வணிக வங்கிகள் பயிர் கடன் வழங்கும் விபரத்தை, இந்த தளத்தில் பதிவேற்றம் செய்கின்றன.
கூட்டுறவு சங்கங்களும் இவ்வாறு செய்யும்போது தான், ஒரே நிலத்தில் பயிரிட்ட ஒரு பயிருக்கு, வட்டி தள்ளுபடி சலுகைக்காக, இரு வங்கிகளில் பயிர் கடன்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தது. இதனால், மத்திய அரசிடம் இருந்து சங்கங்களுக்கு வட்டி தள்ளுபடி தொகை கிடைப்பதில்லை.
எனவே, 'சிபில் ஸ்டேட்மென்ட்' பார்த்து கடன் வழங்குவதால், ஒரு விவசாயி, வேறு ஒரு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்தால், அந்த விபரம் கண்டறியப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் வட்டி இழப்பை சந்திப்பது தவிர்க்கப்படும்.
இழப்பு
சிபில் ஸ்டேட்மென்டை பார்க்காமல் கடன் வழங்கப்பட்டதால், கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்தாண்டு 3.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சிபில் ஸ்டேட்மென்டை பரிசீலிப்பதால், கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் பெறும் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
ஏனெனில், சிபில் ஸ்கோர் அடிப்படையில் நாங்கள் கடன் அனுமதியையோ, அளவையோ முடிவு செய்வதில்லை; வேறு வங்கியில் கடன் வாங்கி இருக்கிறாரா என்பதை மட்டுமே பார்க்கிறோம்.
ஒரே சர்வே எண்ணில் ஒரே பயிருக்கு, கூட்டுறவு வங்கி மற்றும் வணிக வங்கியில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன் கடன் பெறுவதால், கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் வட்டி மானிய இழப்பை தவிர்க்கவே, சிபில் ஸ்டேட்மென்டை பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.