கூட்டுறவு சங்கங்கள் 4 ஆண்டாக தொடரும் போலி உறுப்பினர் நீக்கம்
கூட்டுறவு சங்கங்கள் 4 ஆண்டாக தொடரும் போலி உறுப்பினர் நீக்கம்
ADDED : ஏப் 09, 2025 01:29 AM
சென்னை:''கூட்டுறவு சங்க உறுப்பினர்களை முறைப்படுத்தி, ஆதார் எண்ணுடன் இணைத்த பின், அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும்,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - இசக்கி சுப்பையா: தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம், 2023 மே மாதத்துடன் முடிந்து விட்டது. கூட்டுறவு சங்கங்களில் செயல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிக்காலம், 2023 நவம்பரில் முடிவுக்கு வந்தது.
சட்ட விதிகளின்படி, செயல் அலுவலர்களின் பதவிக்காலம் ஆறு மாதங்கள் மட்டுமே. ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும், எந்த சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
தி.மு.க., அரசின் அலட்சியப் போக்கால் கூட்டுறவு சங்க தேர்தல் கேள்விக்குறியாகி விட்டது.
அமைச்சர் பெரியகருப்பன்: கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டுமானால், அதில், உண்மையான உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில், 2 கோடியே, 46 லட்சத்து, 14,949 உறுப்பினர்கள் இருந்ததாக கணக்கு வைத்திருந்தனர். இதை ஆய்வு செய்ததில், பாதிக்கு பாதி போலி உறுப்பினர்கள். அதில், 82 லட்சம் பேர் இறந்து போனவர்கள்.
முறையான உறுப்பினர்களை கண்டறிந்து, அவர்கள் உண்மையானவரா என்பதை நிரூபிக்க, 'ஆதார்' எண், ரேஷன் கார்டு இணைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால், போலி உறுப்பினர்களை நீக்கும் பணி, தி.மு.க., ஆட்சியில் நடந்து வருகிறது. தேர்தலை கண்டு அஞ்சும் இயக்கம் தி.மு.க., அல்ல. கண்டிப்பாக கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

