கிராமம்தோறும் கூட்டுறவு சங்கம் தமிழகத்தில் அவசியம் இல்லை
கிராமம்தோறும் கூட்டுறவு சங்கம் தமிழகத்தில் அவசியம் இல்லை
ADDED : ஜூலை 30, 2025 06:41 AM

சென்னை: அனைத்து கிராமங்களிலும் தலா, ஒரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை துவக்க, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து கிராமங்களுடன் கூட்டுறவு சங்கங்கள் இணைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் கிளை மட்டும் துவக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவை, விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்குவதுடன் உரங்களை விற்கின்றன. ரேஷன் கடைகள் நடத்துகின்றன.
நாடு முழுதும் அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்கு, கூட்டுறவு சேவைகள் கிடைக்க, ஒவ்வொரு கிராமத்திலும் தலா ஒரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் துவக்க, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த சங்கங்கள் வாயிலாக பல்வேறு தொழில்களை துவக்கி, விவசாயிகள், மக்களுக்கு உதவுமாறும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இந்நிலையில், கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 12,500 கிராம ஊராட்சிகளும், 4,473 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களும் உள்ளன. ஒரு சங்கத்துடன் இரண்டு, மூன்று கிராமங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
அவற்றின் வாயிலாக கடந்த, 2024 - 25ல், 10,850 கோடி ரூபாய் 'டிபாசிட்' திரட்டப்பட்டுள்ள நிலையில், 46,000 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு கிராமத்திலும் புதிய சங்கத்தை உருவாக்கினால் செயலர், பணியாளர்கள் போன்ற புதிய பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். இதற்கு கூடுதல் செலவாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும், கூட்டுறவு சங்கங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
எனவே, தமிழகத்தில் தலா ஒரு கிராமத்துக்கு ஒரு சங்கம் அமைக்கும் அவசியம் ஏற்படவில்லை. இதற்கு மாற்றாக, அவசியம் ஏற்பட்டால், ஏற்கனவே உள்ள சங்கங்களின் கிளைகள் மட்டும் துவக்கப்படும். சங்க பணியாளர்களே அங்கும் பணிபுரிவர். இவ்வாறு அவர் கூறினார்.