திருச்சூர் ஏ.டி.எம்.,கள் கொள்ளையில் காஸ் கட்டர் ஆற்றில் கண்டெடுப்பு
திருச்சூர் ஏ.டி.எம்.,கள் கொள்ளையில் காஸ் கட்டர் ஆற்றில் கண்டெடுப்பு
ADDED : அக் 08, 2024 01:50 AM

நாகர்கோவில்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மூன்று ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட காஸ் கட்டர் மற்றும் பணத்தட்டுகளை ஆற்றில் இருந்து ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் போலீசார் கண்டெடுத்தனர்.
செப்.26 இரவில் திருச்சூர் மாவட்டத்தில் மாப்ராணம் உள்ளிட்ட மூன்று இடங்களில் பாரத ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,களில் ரூ.68 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் தமிழகத்துக்குள் நுழைந்து நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் கண்டெய்னர் லாரியில் தப்பிச்சென்ற போது துப்பாக்கி முனையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஜுமைதீன் ஹமீது 40, சுட்டுக் கொல்லப்பட்டார். ஹசார் அலிக்கு 26, காலில் காயம் ஏற்பட்டது. முகமது இக்ராம் 42, இர்பான் 32, சபீர் கான் 26, சவுகின் கான் 26, முபாரக் 20, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பேரையும் திருச்சூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை நடந்த ஏ.டி.எம்.களுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏ.டி.எம்.களை உடைக்க பயன்படுத்திய காஸ் கட்டர்கள் மற்றும் ஏ.டி.எம்., பணத்தட்டுகள் உள்ளிட்டவை திருச்சூர் தாணிக்கூடம் ஆற்றில் இருந்து ஸ்கூபா வீரர்களின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டது. ஒரு மூடையில் கட்டி வீசப்பட்டிருந்தது.
அதில் ஒரு சிறிய காஸ் சிலிண்டரும் இருந்தது. 5 பேரது போலீஸ் காவல் இன்று முடியும் நிலையில் அவர்கள் மீண்டும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.