பறிமுதல் செய்த போனை தராத கல்லுாரி நிர்வாகம் இரண்டு வாரங்களுக்குள் வழங்க கோர்ட் உத்தரவு
பறிமுதல் செய்த போனை தராத கல்லுாரி நிர்வாகம் இரண்டு வாரங்களுக்குள் வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : செப் 28, 2025 06:28 AM
சென்னை: 'பள்ளி விடுதிகளிலே மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்கும்போது, கல்லுாரி விடுதியில், மாணவியின் மொபைல் போன்களை பறிமுதல் செய்தது ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த, செவிலியர் அபிநயா தாக்கல் செய்த மனு:
பெரம்பலுார் ஸ்ரீனிவாசன் நர்சிங் கல்லுாரியில், 2014 முதல் 2018ம் ஆண்டு வரை விடுதியில் தங்கியிருந்து, பி.எஸ்சி., நர்சிங் படித்தேன். கடந்த 2016ம் ஆண்டில், என் அம்மாவிடம் மொபைல் போனில் பேசியபோது, வார்டன் சிவரஞ்சனி, 15,000 ரூபாய் மதிப்புள்ள போனை பறிமுதல் செய்தார்; அடுத்து 2017ல், விடுதியில் வைத்திருந்த, மற்றொரு மொபைல் போனையும் பறிமுதல் செய்தார்.
வகுப்பறை நேரங்களில் போன் பயன்படுத்துவது இல்லை. விடுதியில் இருக்கும்போது பெற்றோரிடம் போனில் பேசுவேன். விடுதியில் பயன்படுத்திய போதுதான், இரண்டு போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வலுக்கட்டாயமாக போன் ரகசிய குறியீட்டை பெற்று, அனுமதியின்றி போனில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டனர். ரகசிய குறியீட்டை உடனே வழங்காததால், 2017ல் செயல்முறை தேர்வின் போது, வெளியே நிற்க வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டேன்.
கடந்த 2018ல் படிப்பை முடித்த பின், பறிமுதல் செய்த மொபைல் போன்களை திரும்ப வழங்க கோரினேன். பல முறை கல்லுாரி நிர்வாகத்தை அணுகியும், அவர்கள் தரவில்லை.
இதனால், மன ரீதியாக பாதிக்கப்பட்டேன் மொபைல் போன்களை திரும்ப வழங்க கோரி, கடந்த ஜூன் 16 மற்றும் ஜூலை 11ல் அளித்த மனுவை பரிசீலிக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.கவுதம்குமார், டி.கோகுலகிருஷ்ணன் ஆஜராகி, 'பறிமுதல் செய்த போன்கள் கல்லுாரிக்கு சொந்தமானவை என, மனுதாரரிடம் கூறியுள்ளனர். இது சட்டவிரோதமானது. மூன்று ஆண்டுகளாக மனுதாரர் அலைக்கழிக்கப்பட்டு உள்ளார்' என்றனர்.
அப்போது, கல்லுாரி நிர்வாகம் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரியதை ஏற்க மறுத்த நீதிபதி, ''இப்போது எல்லாம் பள்ளி விடுதிகளிலேயே மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்கப்படும் போது, கல்லுாரி மாணவியிடம் இருந்து போன்களை பறிமுதல் செய்தது ஏன்?
''இரண்டு வாரங்களுக்குள் கல்லுாரி நிர்வாகம் மனுதாரரிடம் மொபைல் போனை ஒப்படைக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.