அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணையை தொடர நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணையை தொடர நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 29, 2024 11:57 PM
சென்னை:இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பதிவான வழக்கில், தன்னை சேர்த்ததை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், விசாரணையை தொடர்ந்து நடத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சட்டசபை தொகுதியில், 2009ல் இடைத்தேர்தல் நடந்தது.
இதில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், பேயன்விளை என்ற கிராமத்தில் பிரசாரம் செய்த போது, அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் முன், தி.மு.க.,வுக்கு ஓட்டு சேகரித்தார்.
உடன், அங்கு வந்த அ.தி.மு.க.,வினர், அனிதா ராதாகிருஷ்ணனிடம், இரட்டை இலைக்கு ஓட்டு போடும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, அவருடன் பிரசாரத்துக்கு வந்த தி.மு.க.,வினர், அ.தி.மு.க., தொண்டர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 16 தி.மு.க.,வினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், குற்றப்பத்திரிகையில் அமைச்சரின் பெயர் இடம் பெறவில்லை. திருச்செந்துார் நீதிமன்றத்தில் இருந்த வழக்கு துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த துாத்துக்குடி நீதிமன்றம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டப்பட்டவராக சேர்த்து, 2022 செப்டம்பரில் உத்தரவிட்டது.
இதை ரத்து செய்யக்கோரி, 2023ல் சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.
அப்போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல், வழக்கில் தன்னை சேர்த்துள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கும் போது, சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என எந்த நடைமுறையும் இல்லை என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
அத்துடன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, 'சம்மன்' அனுப்பி, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்தும்படி துாத்துக்குடி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

