துரைமுருகனுக்கு 'பிடிவாரன்ட்' அமல்படுத்த கோர்ட் உத்தரவு
துரைமுருகனுக்கு 'பிடிவாரன்ட்' அமல்படுத்த கோர்ட் உத்தரவு
ADDED : செப் 05, 2025 12:59 AM
சென்னை:சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 'பிடிவாரன்ட்' உத்தரவை, வரும் 15ம் தேதி அமல்படுத்தும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் துரைமுருகன். 2007- முதல், 2009 வரையிலான கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, 2011ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்தது.
அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம் 2017 ஜனவரியில் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், துரைமுருகன், அவரது மனைவியை விடுவித்த வேலுார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்தது.
அப்போது, 2024ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர், அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்தும், குற்றச்சாட்டு பதிவுக்கு ஆஜராகாததால் இருவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தும், கடந்த மாதம் 21ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி இ.பக்தவச்சலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் ஆஜராகவில்லை; அவரின் மனைவி சாந்தகுமாரி ஆஜரானார். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் உத்தரவை திரும்ப பெறக்கோரி மனு தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற நீதிபதி, சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரன்ட் உத்தரவை திரும்ப பெற்றார்.
பின், இந்த வழக்கின் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரன்டை அமல்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டார்.