கடன் விவகாரத்தில் தமிழக அரசு மீது விமர்சனம்; பிரவீன் சக்கரவர்த்திக்கு வலுக்கிறது கண்டனம்
கடன் விவகாரத்தில் தமிழக அரசு மீது விமர்சனம்; பிரவீன் சக்கரவர்த்திக்கு வலுக்கிறது கண்டனம்
ADDED : டிச 30, 2025 12:53 AM

-- நமது நிருபர் -
தமிழகத்தின் கடன், உத்தர பிரதேசத்தை விட அதிகரித்திருப்பதாக கூறி தி.மு.க.,வை விமர்சித்த காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவரும், ராகுலின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்திக்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க., தலைவர் விஜயை கடந்த 5ம் தேதி சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரவீன் சக்கரவர்த்தி, '2010ல் உ.பி.,யின் கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
'ஆனால், இப்போது கடன் வாங்குவதில் உ.பி.,யை தமிழகம் விஞ்சி விட்டது' எனக்கூறி, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு, தி.மு.க., காங்கிரஸ், வி.சி., கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரசை பொறுத்தவரை ராகுல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆகியோர் சொல்வது தான் அதிகாரப்பூர்வ கருத்து.
ராகுல் மற்றும் காங்கிரசின் நற்பெயரை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அந்த தனிநபர்களின் கனவு பலிக்காது; அது பகல் கனவாகவே முடியும். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி எக்கு கோட்டை போல பலமாக உள்ளது. இதை, தனிநபர்கள் யாரும் பிரிக்க முடியாது.
தமிழகத்தில் பா.ஜ.,வை காலுான்ற வைக்க சில சக்திகள் மறைமுகமாக முயற்சிக்கின்றன. அவர்கள் காங்கிரசுக்குள் இருந்து கொண்டு இந்த வேலையை செய்தாலும் அனுமதிக்க மாட்டோம். உ.பி.,யில், 'புல்டோசர்' ஆட்சி நடக்கிறது.
அந்த ஆட்சியோடு தமிழகத்தை ஒப்பிடுவது அபத்தமானது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பிரவீன் சக்கரவர்த்தி முயற்சிக்கிறார். அவரது கருத்திற்கும் காங்கிரசுக்கும் தொடர்பு இல்லை.
தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா: தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்ட யாருடனும் மோதலில் ஈடுபடுவதை, 'இண்டி' கூட்டணியினர் தவிர்க்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பவர்களுடன் போரிட வேண்டிய நாம், தேவையற்ற கவனச் சிதறல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல, கூட்டணியினர் ஒவ்வொருவரும் நேரத்தை செலவிடுங்கள். திசை திருப்பும் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
வி.சி., துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ்:
'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று, அறச்சீற்றத்துடன் ஈ.வெ.ராமசாமி வெளியேறி, தனி இயக்கம் துவங்கி, 100 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், காங்கிரசுக்குள் அந்த சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கின்றனர் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது.
ஈ.வெ.ராமசாமி வழியில் ராகுல் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர், ஆர்.எஸ்.எஸ்., வழியில் பயணிப்பது தான் அக்கட்சி சந்திக்கும் பெரும் சிக்கல். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

