என்னை விமர்சித்தால் அதே பாணியில் பதிலடி: அ.தி.மு.க., விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
என்னை விமர்சித்தால் அதே பாணியில் பதிலடி: அ.தி.மு.க., விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
ADDED : ஆக 28, 2024 06:10 AM

சென்னை: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீதான விமர்சனத்தை திரும்ப பெறப் போவதில்லை. என்னை விமர்சித்தால், அதே பாணியில் பதிலடி கொடுப்பேன்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை, செப்., 1ல் துவங்குகிறது. பா.ஜ.,வின் முதல் அடிப்படை உறுப்பினராக, பிரதமர் மோடி இணைகிறார். தமிழகத்தில், செப்.,2ல், முதல் உறுப்பினராக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இணைகிறார்.
அரசியல் தொடர்பே இல்லாத, 1 லட்சம் இளைஞர்களை கண்டறிந்து, அரசியல் தலைவர்களாக உருவாக்க, செப்டம்பர், அக்டோபரில் கிராமங்களை நோக்கிச் செல்ல உள்ளோம்.
பா.ஜ.வில் இணைய, மொபைல் போன் எண் கொடுக்கப்படும். அதில், 'மிஸ்டு கால்' கொடுத்தால் பா.ஜ., நிர்வாகிகள் வீட்டுக்கு வந்து உறுப்பினராக சேர்ப்பார்கள். அதன்பின், உட்கட்சி தேர்தல் நடக்கும்.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், ஐப்பான், துபாய், சிங்கப்பூர் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் தோல்வி அடைந்துள்ளது. இப்போது, அமெரிக்கா செல்கிறார்.
அவர் செல்லவுள்ள சான்பிரான்சிஸ்கோ போன்ற பகுதிகளில், தமிழர்கள் கொடிகட்டி பறக்கின்றனர். அவர்களை பிடித்தாலே முதலீடுகள் வரும். அனைத்தையும் பா.ஜ., கவனித்து வருகிறது.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 5,000 கோடி ரூபாயை, மத்திய அரசு கொடுத்துள்ளது. நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை ஒப்புக்கொண்ட தமிழக அரசு, மும்மொழிக் கொள்கை இருப்பதாகக் கூறி இப்போது மறுக்கிறது.
மூன்றாவது மொழியாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழியை, தமிழக அரசு எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், அரசியல் விளையாட்டுக்காக, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்க மறுக்கிறது.
எனக்கு மூன்று ஆண்டுகள் அரசியல் அனுபவம்தான் என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். தமிழகத்தில் 40 சதவீத வாக்காளர்கள் இளைஞர்கள். நான் அரசியலுக்கு வரும்முன், 10 ஆண்டுகள் ஐ.பி.எஸ்., அதிகாரியாக, அரசியல் தலைவர்களை எதிர் கொண்டுள்ளேன். இது அனுபவம் இல்லையா; 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பல நாடுகளில் அதிபர்களாக உள்ளனர்.
பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரி. முன்னாள் அமைச்சர்கள் என்னை தற்குறி என்று கூறலாம். என் படிப்பை, என் வேலையை கொச்சைப்படுத்தலாம். அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நான் கையை, காலைப் பிடித்து அரசியலுக்கு வந்ததாக, 70 வயது பழனிசாமி பேசலாம். அதற்கு, 39 வயது அண்ணாமலை பதிலடி கொடுத்தால் தவறா? ஆபாசமாக பேசியவர்களுக்கு, அதே பாணியில் பதிலடி கொடுத்தால் கோபம் வருகிறது. என்னை விமர்சித்தால், அதே பாணியில் பதிலடி கொடுப்பது என் கடமை.
நான் தமிழகத்தை முன்னிலைப்படுத்தி, என் பாணியில் அரசியல் செய்து வருகிறேன்.
அ.தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் தலைக்கு 'டை' அடித்துக் கொண்டு தங்களை இளைஞர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். நான் நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எதிர்தரப்பிலும் அந்த நியாயம் இருக்க வேண்டும்.
இதுவரை எப்படி சண்டை போட்டேனோ, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை மாணவராகவும் சண்டை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.