2 விசில், தோனி ஜெர்சி; சி.எஸ்.கே., போட்ட ஐ.பி.எல்., 'குண்டு!' ரசிகர்கள் ஷாக்
2 விசில், தோனி ஜெர்சி; சி.எஸ்.கே., போட்ட ஐ.பி.எல்., 'குண்டு!' ரசிகர்கள் ஷாக்
ADDED : செப் 11, 2024 01:57 PM

சென்னை: தோனி ஓய்வு பெறுவதை குறிப்பிடும் வகையில் அவரது ஜெர்சி போட்டோவுடன் major missing என்று எக்ஸ் தளத்தில் சி.எஸ்.கே. வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
ஓய்வு
தல போல வருமா? என்று இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தோனி. சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், தற்போது ஐ.பி.எல்., போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
சாம்பியன்
2023ம் ஆண்டு ஐ.பி.எல்., தொடரே அவருக்கு கடைசி என்று அனைவரும் எண்ணிய நேரத்தில் கோப்பையை வென்று கொடுத்து அடுத்தாண்டும் விளையாடுவதாக அறிவித்தார். பின்னர் கேப்டன் பதவியில் இருந்து இறங்கி, ஒரு வீரராக மட்டுமே அணியில் இடம்பிடித்து இருந்தார்.
முடிவு
அடுத்தாண்டு ஐ.பி.எல்.,தொடருக்கான ஏலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதியை பொறுத்தே அணியில் விளையாடுவாரா என்பதை தோனியே முடிவெடுப்பார் என்று சி.எஸ்.கே., கூறி இருந்தது.
தோனி ஜெர்சி
இந்நிலையில் சி.எஸ்.கே., அணி நிர்வாகம் தமது எக்ஸ் வலை தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது. அதில் ஒரு புறம் விசில், மறுபுறம் தோனியின் 7ம் நம்பர் ஜெர்சி, கீழே அணியின் கொடி, வலதுபுறத்தில் சேப்பாக்கம் மைதானம் ஆகிய படங்களை ஒன்றாக இணைத்து ஒரே படமாக வெளியிட்டு இருக்கிறது. அதற்கு மேஜர் மிஸ்ஸிங் (major missing) என்ற வார்த்தையை தலைப்பாகவும் அவர்கள் வைத்துள்ளனர்.
ரசிகர்கள் ஷாக்
படத்தை பார்க்கும் ரசிகர்கள், அதற்கு மேலே பதிவிடப்பட்டு உள்ள மிஸ்ஸிங் என்ற வார்த்தைகளை கண்டு ஷாக் ஆகி இருக்கின்றனர். சி.எஸ்.கே., அணியில் தோனி இல்லை என்பதை தான் சூசகமாக குறிப்பிட்டு உள்ளனர், விரைவில் அவர் ஓய்வை அறிவிக்க போகிறார், அதற்காக தான் இப்படி ஒரு பதிவு என்று ரசிகர்கள் கருத்துகளை வெளியிட்டு உள்ளனர்.
விளக்கம்
ரசிகர்கள் ஆளுக்கு ஒருபுறம் இஷ்டம் போல் மனதில் உதித்ததை கமெண்டுகளாக போட்டு எக்ஸ் வலைதளத்தை நிரப்பிக் கொண்டு இருக்க, சி.எஸ்.கே., நிர்வாகம் எந்தவித விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை.