சீரக சம்பா அரிசி விலை 'விர்ர்ர்' கிலோ ரூ.210க்கு விற்பனை: ஒரு மாதத்தில் ரூ.80 வரை உயர்வு
சீரக சம்பா அரிசி விலை 'விர்ர்ர்' கிலோ ரூ.210க்கு விற்பனை: ஒரு மாதத்தில் ரூ.80 வரை உயர்வு
ADDED : ஆக 13, 2025 05:08 AM
தேனி: பிரியாணி சமைக்க உகந்த சீரக சம்பா அரிசி, கிலோவிற்கு ஒரே மாதத்தில், 80 ரூபாய் உயர்ந்து 210 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், கடந்த சில மாதங்களாக சீரக சம்பா அரிசி விலை உயர்ந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன் சில்லரையில் கிலோ, 120 முதல் 140 வரை விற்பனையானது. தற்போது கிலோ, 210 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், வீடுகளில் சீரக சம்பா பிரியாணி செய்ய விரும்புவோர் சாதாரண அரிசியை பயன்படுத்தும் நிலை உள்ளது. விலை உயர்வால், சீரக சம்பா பிரியாணி கடை உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
தேனி அரிசி விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் அதிக அளவிலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் சீரக சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. சில மாதங்களாக மேற்கு வங்கத்தில் சீரக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இத னால், அங்கிருந்து சீரக சம்பா அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதே நேரத்தில், நம் மாநிலத்தில் ஆடி திருவிழாக்களால் சீரக சம்பா அரிசி தேவை அதிகரித்துள்ளதால், விலையும் உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் மொத்த விற்பனை விலை கிலோவிற்கு 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில மாதங்கள் வரை தொடரும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.