போதைப்பொருள் கடத்தியதாக மிரட்டி பெண்ணிடம் ரூ.1.18 கோடி சுருட்டல் சைபர் குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
போதைப்பொருள் கடத்தியதாக மிரட்டி பெண்ணிடம் ரூ.1.18 கோடி சுருட்டல் சைபர் குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
ADDED : நவ 29, 2024 01:26 AM
சென்னை:போதை பொருள் கடத்தியதாக பெண் ஒருவரை மிரட்டி, 1.18 கோடி ரூபாய் சுருட்டிய சைபர் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் கீதா, 58. இவரின் மொபைல் போன் எண்ணுக்கு, நவம்பர், 2ம் தேதி மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். 'பெடெக்ஸ் கூரியர்' நிறுவனத்தில் இருந்து பேசுவதாக சொல்லி, 'நீங்கள் அனுப்பியுள்ள பார்சலில், போதை பொருள் உள்ளது.
இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அவர்கள் உங்களிடம் விசாரிப்பர்; லைனில் இருங்கள்' எனக்கூறி, இணைப்பை மாற்றி உள்ளனர்.
அதன்பின் பேசிய நபர், 'உங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்களை பயன்படுத்தி, முகமது இஸ்மாயில் நவாப் என்பவர், மூன்று வங்கி கணக்குகளை துவங்கி உள்ளார்.
'அதன் வாயிலாக, ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதுபற்றியும் விசாரிக்க வேண்டும். மும்பைக்கு நேரில் வாருங்கள்' எனக்கூறி, தொடர்பை துண்டித்துஉள்ளார்.
பத்து நிமிடங்கள் கழித்து, 'வாட்ஸாப் வீடியோ' அழைப்பில், பால்சிங் ராஜ்புத் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பேசுவதாக, ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
'மும்பை சைபர் குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் நான். உங்கள் கணவரையும், உங்களையும் கைது செய்ய உள்ளோம். நீங்கள் உண்மையிலேயே போதை பொருள் கடத்தவில்லை; சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு தருகிறோம்.
'நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புங்கள். அந்த பணத்தை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து, எங்களுக்கு அறிக்கை அனுப்பும். அந்த பணத்தையும் உங்களுக்கே திருப்பி அனுப்பி விடுவர்' என்று, தெரிவித்து உள்ளார்.
இதனால், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு கீதா, 2 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். அதன்பின், தொடர்ந்து மிரட்டல் விடுத்து, ஆறு நாட்களாக அவரிடம் இருந்து, 1.18 கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.
இதுகுறித்து கீதா, சென்னை அசோக் நகரில் உள்ள, மாநில சைபர் குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைபர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.