ADDED : டிச 01, 2024 12:35 AM

சென்னை: தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. கோடை வெயிலால், இந்த ஆண்டு மே, 2ல், 20,830 மெகா வாட்டாக, மின் நுகர்வு அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ளது. தினமும் சராசரியாக, 2,800 - 3,000 மெகா வாட்டாக உள்ளது.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல தொழில் நிறுவனங்கள் செயல்படவில்லை. வீடுகளிலும் மின் பயன்பாடு குறைந்துள்ளது.
பலத்த காற்று வீசும் இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் மின்நுகர்வு நேற்று, 1,500 மெகா வாட் குறைந்தது. மாநிலம் முழுதும் ஒட்டுமொத்த மின் தேவை, 3,500 மெகா வாட் அளவுக்கு குறைந்து, 11,500 மெகா வாட் என்றளவில் சரிவடைந்து உள்ளது.

