ADDED : நவ 20, 2024 02:19 AM

திருச்சி:துறையூர் நகரின் மையப்பகுதியில், குடிநீர் ஆதாரமாக விளங்கிய சின்ன ஏரி, தற்போது கழிவுநீர் தேக்கமாக மாறி, தொற்று நோய்களை பரப்பும் மையமாக மாறி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் 75 ஏக்கரில் பரந்து விரிந்த நீர்நிலையாக, சின்ன ஏரி உள்ளது. கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், துறையூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கும் பயன்பட்டு வந்த சின்ன ஏரி, தற்போது துறையூர் நகரின் கழிவுநீர் தேக்கமாக மாறி, தொற்று நோய்களை பரப்பும் மையமாக மாறியுள்ளது.
நகரின் மையப்பகுதில் ஏரி அமைந்துள்ளதால், நகரின் அனைத்து கழிவுநீர் வாய்க்கால்களும் ஏரியில் தான் சங்கமிக்கின்றன. மருத்துவ கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுநீர், பிளாஸ்டிக் பை குப்பை அனைத்தும் சின்ன ஏரிக்கே வருகின்றன. இதனால் ஆண்டு முழுதும் ஏரியில் நீர் நிரப்பி இருந்தாலும், அது துறையூரின் குப்பைத் தொட்டியாகவே உள்ளது.
இதனால், இங்கிருந்து குடிநீர் தண்ணீர் எடுக்க முடியவில்லை; பாசனத்துக்கும் தண்ணீர் திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் கெட்டுப் போயுள்ளது. பாலித்தீன் பைகள் ஏரியில் நிறைந்துள்ளதால், நிலத்தடி நீர் ஊற்றுகள் பாதிப்படைந்துள்ளன.
இதனால், ஏரியில் இருந்து வீசும் துர்நாற்றம், துறையூர் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதனால், ஏரியில் உயிரினங்கள் வாழ தகுதியற்று, மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. கால்நடைகளை கூட இங்கு தண்ணீர் பருக, அதன் உரிமையாளர்கள் விடுவதில்லை.
இந்த ஏரி, திருச்சி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியை கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக துார் வார நீர்வளத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஏரி முழுதும் செடிகள், புதர்கள் துார்ந்து போயுள்ளது.
கடந்த, 2017ம் ஆண்டு சின்ன ஏரியை, தேசிய ஏரிகள் பாதுகாப்பு திட்டத்தில் துார்வாரி சீரமைக்க, 7 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டது.
அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே போல, தேர்தல் நேரத்தில் வரும் அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்கள் அனைவரும், 'சின்ன ஏரியை துார்வாரி படகு விடுவோம்; குடிநீர் ஆதாரமாக்குவோம்' என்றெல்லாம் பேசி வருகின்றனரே ஒழிய, இதுவரை ஏரியை சீர்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சின்ன ஏரியால், துறையூர் மக்கள் கொடிய நோய்களால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால், சின்ன ஏரி துார்வாரி, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, அதை மீண்டும் நகரின் முக்கிய நீர் ஆதாரமாகவும், பாசன ஏரியாகவும் மாற்ற வேண்டும்.
நகராட்சி பகுதி கழிவு நீர்களை, ஏரியில் விடாமல் இருக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.