தாவூதி போரா முஸ்லிம் சமூக தலைவர் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
தாவூதி போரா முஸ்லிம் சமூக தலைவர் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
ADDED : ஜூலை 12, 2025 12:40 AM

சென்னை:முதல்வர் ஸ்டாலினை, உலகளாவிய தாவூதி போரா சமூகத்தின், 53வது தலைவர் புனித சையத்னா முபாதல் சைபுதீன், சந்தித்துப் பேசினார்.
தாவூதி போரா முஸ்லிம் சமூகத்தின் 'மொஹரம் சபை' நிகழ்ச்சி, ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை சென்னையில் நடந்தது.
பாரிமுனை மூர் தெரு, மசூதியில் நடந்த இந்நிகழ்வில், அச்சமூக தலைவர் சையத்னா முபாதல் சைபுதீன் பங்கேற்று, தினமும் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
இந்நிகழ்வு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடல், கீழ்ப்பாக்கம் விங்ஸ் கன்வென்ஷன் சென்டர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னையில், 50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்நிகழ்வில், உலகம் முழுதும் இருந்து வந்திருந்த, 43,000 தாவூதி போரா முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
மொகரம் சபை நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ள, சையத்னா முபாதல் சைபுதீன், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அப்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடனிருந்தார்.
ஆஷாரா முபாரகா நிகழ்வுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் என பல்வேறு வகையில், தமிழக அரசு ஆதரவளித்தது. அதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு, சையத்னா முபாதல் சைபுதீன் நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழக மக்களின் வளர்ச்சி, செழிப்புக்காகவும் அவர் பிரார்த்தனை செய்தார்.
தாவூதி போரா முஸ்லிம் சமூகத்தின் ஒழுக்கமான அமைப்பையும், வர்த்தகம், சமூக மேம்பாட்டில் அவர்களின் பங்களிப்பையும், முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.