ADDED : மார் 01, 2026 06:24 AM

சென்னை: க டன் வாங்காத பெண்ணை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, அநாகரிகமாக பேசிய தனியார் நிறுவன கடன் வசூலிப்பாளரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சாலிகிராமம், தசரதபுரத்தைச் சேர்ந்த 49 வயது பெண், காவல் துறையின் இணைய தளம் வாயிலாக மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில், புகார் ஒன்றை அளித்தார்.
அதன் விபரம்:
கடந்த பிப்., 20ம் தேதி, என் மொபைல் போனிற்கு தொடர்பு கொண்டு இருவர் பேசினர்.
தங்களை வழக்கறிஞர்கள் என்றும் உயர் நீதிமன்றத்திலிருந்து பேசுவதாகவும், வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இருப்பதாகவும் கூறி, அநாகரிகமாக பேசினர்.
பின், 23ம் தேதி, மீண்டும் பேசிய இருவரும், அதேபோல் ஆபாசமாக பேசினர். நான் வாங்காத கடனுக்கு, பணத்தை தரச்சொல்லி தொல்லை தந்ததோடு, அநாகரிகமாக பேசிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் விசாரணையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசியது ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சரண், 25, என்பதும், தனியார் நிறுவனத்தில் கடன் வசூலிப்பாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. போலீசார் அவரை, நேற்று கைது செய்தனர். மற்றவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

