பொது இடங்களில் ரூ.125 கோடியில் கழிப்பறைகள் கட்ட முடிவு
பொது இடங்களில் ரூ.125 கோடியில் கழிப்பறைகள் கட்ட முடிவு
ADDED : நவ 20, 2024 12:28 AM
சென்னை:'துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், 125 கோடி ரூபாயில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்டத்தில், மத்திய அரசு, 60 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீதம் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.
இத்திட்டத்திற்கு இந்தாண்டுக்கு மத்திய அரசு, 75 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. அதேபோல, தமிழக அரசு நிதியாக, 50 கோடி ரூபாய் என, 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, கழிப்பறை உள்ளிட்ட சுகாதார பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அத்துறையின் செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
இத்திட்டத்தில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் பொது கழிப்பறைகள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.