1.07 கோடி தொற்றா நோயாளிகள் விபரம் 'டிஜிட்டல்' முறையில் ஆவணமாக்க முடிவு
1.07 கோடி தொற்றா நோயாளிகள் விபரம் 'டிஜிட்டல்' முறையில் ஆவணமாக்க முடிவு
ADDED : ஜன 19, 2024 11:54 PM

சென்னை:''தமிழகத்தில், 1.07 கோடி தொற்றா நோயாளிகளின் விபரங்கள், 'டிஜிட்டல்' தொழில் நுட்பத்தில் ஆவணப்படுத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பன்னாட்டு மருத்துவ மாநாட்டை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில், 'மருத்துவத்தின் எதிர்காலம்' என்ற தலைப்பில், ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.
இதில், 11,000 டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், வெளிநாடுகளை சேர்ந்த 28 டாக்டர்கள், இந்தியாவை சேர்ந்த, 150 டாக்டர்கள் பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
வெளிநாடுகளுக்கு இணையாக, மருத்துவத்தில் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. மருத்துவ மாநாட்டில் வெளியிடப்படும், பேசப்படும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டு, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படும்.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவத்தில் கண்டறியப்பட்ட, 1.07 கோடி தொற்றா நோயாளிகளின் விபரங்களை, டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தொழிலாளர்களை தேடி மருத்துவத்தில் எட்டு லட்சம் பேர் பயன்பெற உள்ளனர். இதற்காக, தாய்லாந்து நாட்டிற்கு, நம் மருத்துவ குழுவினர் செல்ல உள்ளனர். உலகளவில், அந்நாட்டில் தான், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் நோயாளிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பேசுகையில், ''மூன்று நாட்கள் நடைபெறும் மருத்துவ மாநாட்டில், 625 மருத்துவ ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட உள்ளன. அதேபோல, மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்துறை டாக்டர்கள் பேச உள்ளனர்,'' என்றார்.